தமிழ் ஜோதிட களஞ்சியம்



ஜோதிடம் கற்க வருக

பூமியில் வாழும் மனிதர்களின் மீதான கிரகங்களின் ஆதிக்கத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தொலை தூரத்தில் சுற்றி வரும் கிரகங்களால் பூமியில் நிகழும் அரசியல் மாற்றங்கள், தனி மனித வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்வி, கலை இலக்கியங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலரால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சோதிடக்கலை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பராசரர் முதலான முனிவர்களின் ஞான திருஷ்டி மூலம் தோன்றியதாகும். மேலும் வேதங்களின் ஒரு அங்கமாகவும் உள்ளது. இவை வேதாங்கம் என்று அழைக்கப்படுகிறது. சிக்ஷா, சந்தா, வியக்கிர்ணம், நிருக்தா, கல்ப, ஜ்யோதிஷ என்பன அந்த ஆறு வேதாங்கங்கள் ஆகும். இவற்றுள் ஜோதிடம் கடந்த காலம், நிகல் காலம், எதிர் காலம் மூன்றையும் கணிப்பதால் வேதங்களின் கண்கள் என போற்றப்படுகிறது.

ஜோதிடம் என்பது கிரகங்களின் தாக்கத்தைப் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பாகும். இந்த கிரகங்கள் வானவியல் மற்றும் கணிதவியல் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஒருவரின் ஜாதக கட்டத்தில் குறிக்கப்படுகிறது. இந்த கட்டம் நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி , நாளுக்கு நாள் மாறுபடும். எனவே ஒருவரின் ஜாதகம் போல் மற்றவருடையது இருப்பதில்லை. ஜோதிடத்தை வெறும் ஏட்டுகல்வி மூலம் மட்டும் கற்க இயலாது. கடவுள் நம்பிக்கை, அனுபவம், தூய வாழ்க்கை, எளிமை போன்ற பண்புகள் ஜோதிட நிபுணத்துவம் பெற அவசியம்.

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் போன்றது. பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது. இக்கடலில் மூழ்கி முத்தெடுக்க அனைவரையும் அழைக்கிறோம்.